தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் ஆர்.என். ரவி வெளியேற்றம்; ஆளுநர் நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் அனலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அதன் பின்னர் ஆளுநர் தனது உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவையின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், உரையை வாசிக்க மறுப்புத் தெரிவித்தார்.
வெளிநடப்பு
அவையை விட்டு வெளியேறிய ஆளுநர்
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக தேசிய கீதமே முதலில் பாடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எவ்வித உரையும் நிகழ்த்தாமல் அவர் அவையிலிருந்து வெளியேறினார். இ ந்த அசாதாரண சூழலைத் தொடர்ந்து, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாகவே அவை ஏற்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை நினைவு கூர்ந்தார். ஆளுநரின் இந்தச் செயல் சட்ட விதிகளுக்கும், பல தசாப்த கால சட்டமன்ற மரபுகளுக்கும் எதிரானது என்று அவர் கடுமையாகச் சாடினார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரை வாசித்தார்.