நீட் போராட்டக்காரர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிவாரணம்: அனைத்து FIR-களும் ரத்து
செய்தி முன்னோட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலை 20 முதல் 25 வரையிலான காலத்தில் மாணவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து FIRகளையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமயிலான அமர்வு, புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்ற மத்திய அரசின் உறுதிமொழியைப் பதிவு செய்து கொண்டது. இருப்பினும், தீவிர குற்றப் பின்னணி கொண்ட 2,873 நபர்கள் மீது டெல்லி காவல்துறை தனியாக வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நிலைப்பாடு
நிவாரணத் தொகை அறிவிப்பு மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு
நீட் தேர்வு ரத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு முழு சம்மதம் தெரிவித்துள்ளது.
இதற்கான தொகையை நிர்ணயித்து வழங்குவதற்கு மூன்று மாத கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், உரிய காலக்கெடுவுக்குள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் போய்ச்சேர வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாகக் கூறி, செப்டம்பர் 5 டெல்லியில் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த CJP, தற்போது அந்தப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.