மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
செய்தி முன்னோட்டம்
சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனநலம் பாதித்து குடும்பத்தால் கைவிடப்பட்டு சாலையில் திரிபவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க கோரி பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவிற்கு எந்த பதிலும் இதுவரை வராத காரணத்தினால், அந்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அவர் மனுவில் வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் வந்தது.
அப்பொழுது, மனுதாரர் ஆஜராகி, மனநலம் பாதித்து சாலையில் திரிவோர் குறித்து தகவல் அளிக்க ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கூட அரசு அறிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
விளக்கம் அளிக்கக்கோரி உத்தரவு
அரசு நிதியுதவி பெறும் 55 மறுவாழ்வு மையங்கள் மற்றும் 5 இல்லங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்
இதனையடுத்து தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 55 மனநலம் பாதித்தோருக்கான மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், மனநலம் பாதித்து குணமடைந்தோருக்கு வேலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரையில் ஐந்து இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்காதது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.