தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 74 லட்சம் பெயர்கள் நீக்கம்- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், SIR-க்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் புதிய பட்டியலின்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடியாக உள்ளது. முக்கிய புள்ளிவிவரங்கள்: தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380 ஆண்கள்: 2.7 கோடி பெண்கள்: 2.8 கோடி மூன்றாம் பாலினத்தவர்: 7,617 மாநிலத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி: சோழிங்கநல்லூர் (5.36 லட்சம் வாக்காளர்கள்) குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி: துறைமுகம் (1.16 லட்சம் வாக்காளர்கள்)
நடவடிக்கை
பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்தத் தீவிரத் திருத்த நடவடிக்கையின் போது சுமார் 74,07,207 பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஒருவேளை உங்கள் பெயர் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால் அல்லது அதில் அதிருப்தி இருந்தால், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கைகள்: 1. முதல் மேல்முறையீடு: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 24(a)-இன் படி, வாக்காளர் பதிவு அதிகாரியின் முடிவை எதிர்த்து மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். 2. இரண்டாம் மேல்முறையீடு: மாவட்டத் தேர்தல் அதிகாரியின் முடிவிலும் திருப்தி இல்லையெனில், பிரிவு 24(b)-இன் படி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். 3. புதிய விண்ணப்பம்: தகுதியுள்ள வாக்காளர்கள் மீண்டும் தங்கள் பெயரைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஆன்லைன் (voters.eci.gov.in) அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
சரிபார்ப்பு
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா?
ECI அதிகாரப்பூர்வ இணையதளமான [electoralsearch.eci.gov.in](https://electoralsearch.eci.gov.in/) சென்று, கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கண்டறியலாம்: EPIC Number: இணையதளத்தில் Search by EPIC என்பதை தேர்வு செய்யவும். உங்கள் EPIC எண் மற்றும் மாநிலத்தை(Tamil Nadu) உள்ளிடவும். திரையில் தோன்றும் Captcha குறியீட்டை பதிவிட்டு 'Search' கொடுத்தால் உங்கள் விவரங்கள் திரையில் தோன்றும். தனிப்பட்ட விவரங்கள்: EPIC எண் கையில் இல்லாதவர்கள், Search by Details என்பதை தேர்வு செய்யவும். அதில், பெயர், தந்தை/கணவர் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை பதிவிடவும். Mobile Number: Search by Mobile என்பதை தேர்வு செய்து, உங்கள் எண்ணை பதிவிடவும். மொபைலுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு சரிபார்த்தால், உங்கள் விவரங்கள் உடனடியாக தெரியும்.