1000 விளக்குகளால் உருவான ஸ்ரீரங்கம் கோயிலின் ராஜகோபுரம்
திருச்சியில் உள்ள அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சகஸ்ரதீப வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ஆயிரத்திற்கு மேற்பட்ட விளக்குகளை ஏற்றி ஸ்ரீரங்க கோயிலின் கோபுரத்தை உருவாக்கினர். பூலோக வைகுண்டம் என்றும் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும் கருதப்படும் புனிதமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீப வழிபாட்டில் ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபட்டால் மிகுந்த நன்மைகளை பெறலாம் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு சகஸ்ர தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
விளக்குகளால் உருவாக்கப்பட்ட ராஜகோபுரம்
அந்த வகையில் இந்தாண்டும் முதல் நாள் ரங்கநாயகி தாயார் சன்னதியிலும், இரண்டாம் நாள் சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், மூன்றாம் நாள் நம்பெருமாள் சன்னதியிலும் தீபங்கள் ஏற்றப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் முதல் நாள் ரங்கநாயகி தாயார் சன்னதியில் நேற்று தீபங்கள் ஏற்றப்பட்டது. இதனையடுத்து இந்த சகஸ்ரதீப வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ஆயிரத்திற்கு மேற்பட்ட விளக்குங்கள் ஏற்றி, அடுக்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போல் காட்சியளிக்க செய்தனர். விளக்குகளுக்கு இடையே பூக்களும் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு மிக அழகாக காணப்பட்டது. இதனை காண்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வந்து பக்தி பரவசத்தோடு இறைவனை வழிபட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.