
2015க்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, ஜனவரி 9, 2015 க்கு முன் வந்து அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்தவர்களுக்குப் பொருந்தும். நீண்டகால உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் உயிர் மற்றும் வாழ்வாதாரம் தேடி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு, அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
குடியேற்றச்சட்டம்
புதிய குற்றச்சட்டம்
அண்மையில் அமல்படுத்தப்பட்ட புதிய குடியேற்றச் சட்டத்தின்படி, சரியான ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவின்படி, 2015 க்கு முன்பு வந்து பதிவு செய்த இலங்கைத் தமிழர்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் ஆவணமற்ற குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். மேலும், 2015 டிசம்பர் 16 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட நிர்வாக உத்தரவின்படி, 2015 க்கு முன் வந்த இலங்கை அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விசா கட்டணம் மற்றும் அதிக நாட்கள் தங்கியதற்கான அபராதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.