வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு! இறுதிப் பட்டியல் எப்போது?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 10) நிறைவடைகிறது. கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தச் சிறப்புத் திருத்த பணியின் (SIR) ஒரு பகுதியாக, டிசம்பர் 19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு என மொத்தம் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்தது. பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களை இணைத்துக் கொள்ளவும், 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கவும் பிப்ரவரி 10 (இன்று) வரையிலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை மற்றும் இறுதி பட்டியல் வெளியீடு எப்போது?
புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐயும், திருத்தங்கள் அல்லது முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் இன்று மாலைக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ சமர்ப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களை அளிக்காத காரணத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 12.43 லட்சம் பேரும் இன்றுக்குள் தங்களது உறுதிமொழிச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இன்று பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக சரிபார்க்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்படும். இதனை தொடர்ந்து, பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.