இன்றே கடைசி! SIR படிவம் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்? பட்டியலில் பெயரைச் சேர்க்க உள்ள வாய்ப்புகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) நிறைவடைகிறது. இந்தப் பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் (BLO) விநியோகிக்கப்படும் SIR கணக்கீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவதற்குள் படிவத்தைச் சமர்ப்பிக்கத் தவறிய வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.
என்ன நடக்கும்
SIR படிவம் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்?
வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) முக்கிய நோக்கம், வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே. ஒரு வாக்காளர் தனக்கு வழங்கப்பட்ட SIR படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கத் தவறினால், பின்வரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுதல்: படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. நீண்ட செயல்முறை: பெயர் நீக்கப்பட்டால், வாக்களிக்கும் உரிமையைப் பெற மீண்டும் விண்ணப்பித்து ஒரு நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையைக் கடக்க வேண்டியிருக்கும். BLOக்கள் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை: படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் குடியிருப்புக்கு BLOக்கள் மீண்டும் சென்று, அதன் காரணத்தைத் அருகிலுள்ளவர்களிடம் விசாரித்து உறுதிசெய்து, அதற்கேற்பப் பட்டியலைத் திருத்துவார்கள்.
மீண்டும் சேர்த்தல்
வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்வது எப்படி?
SIR படிவத்தைச் சமர்ப்பிக்கத் தவறியதால் உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை என்றாலோ அல்லது இறுதிப் பட்டியலிலும் இடம் பெறவில்லையென்றாலோ, வாக்களிக்கும் உரிமையை மீட்டெடுக்க பின்வரும் வழிமுறையைப் பின்பற்றலாம். டிசம்பர் 16 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால், அதற்கான காரணங்கள் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் (CEO) இணையதளங்களில் வெளியிடப்படும். பாதிக்கப்பட்ட நபர்கள், தங்கள் ஆதார் அட்டையின் நகலுடன் உரிமைக் கோரிக்கை (Claim) படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
இறுதிப் பட்டியல்
இறுதிப் பட்டியல் வெளியான பிறகும் சேர்க்க முடியுமா?
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரும், தகுதியுள்ள ஒருவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க விரும்பினால், அவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வரை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலரின் (ERO) முடிவில் திருப்தி இல்லை என்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950இன் பிரிவு 24இன் கீழ், முதலில் மாவட்ட ஆட்சியரிடமும், இரண்டாவது மேல்முறையீட்டை தலைமைத் தேர்தல் அலுவலரிடமும் (CEO) தாக்கல் செய்யலாம். எனவே, வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பாதுகாக்க வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகும் உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.