2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்
காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், அரசியலில் இறுதி முடிவு என்று எதுவும் இல்லை என கூறினார். "ஒரு கட்டத்தில், இளைஞர்களுக்கு இடமளிக்கும் நேரம் வரும் என்று நான் நம்புகிறேன். அதுதான் என் எண்ணம்" என பேசியவர், உடனே, அரசியலில், 'எப்போதும் வேண்டாம் என்று சொல்லாதே' என்ற மற்றொரு முழக்கமும் உள்ளது" என விவரித்தார்.
"மக்களுக்காக என்னால் இயன்றதைச் செய்வேன்"
அண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலே தனது இறுதி தேர்தலாக இருக்கும் என தரூர் பேசியதால், அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "நான் ஒருபோதும் உறுதியாக சொல்லவில்லை, இது எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று நான் கூறினேன்," என 67 வயதான எம்பி தெளிவுபடுத்தினார். திருவனந்தபுரத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டால், அது அவருக்கு கடைசி தேர்தல் போல கடுமையாக போட்டியிட்டு, முழு மனதுடன், மக்களுக்காக தன்னால் இயன்றதைச் செய்வதாக தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் தொடர்ந்து மூன்று முறை வென்றவர்
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம், தனது ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் வாழ்வை தரூர் தொடங்கினார். தனது முதல் தேர்தலிலேயே, சிபிஐயின் ராமச்சந்திரன் நாயரை, 95,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றார். அதன் பின்னர் தோல்வியை சந்திக்காத தரூர், 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.