இந்தியாவின் சீரம் நிறுவனம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல்முறையாக அறிமுகம்
இந்தியாவின் சீரம் நிறுவனம் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ஒன்றினை தயாரித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த நோயால் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் ஆரம்பக்கால அறிகுறிகளை புறக்கணிப்பதே இந்த பாதிப்பிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். முறையற்ற பாலியல் தொடர்புகளினாலும் இந்த புற்றுநோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்நிலையில் பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து 'செர்வாகேக்' என்னும் பெயரில் சீரம் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீரம் நிறுவனம் - 'செர்வாவேக்' தடுப்பூசி ரூ.200 முதல் ரூ.400 வரை மட்டுமே விற்பனை
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை 9 முதல் 14 வயது வரையுள்ள பெண்களுக்கு செலுத்த திட்டமிடபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை நாம் உபயோகப்படுத்திக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.3500 முதல் ரூ.4000 வரை செலவிட வேண்டும் என்னும் நிலை உள்ளது. இச்சமயத்தில் சீரம் நிறுவனத்தால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த 'செர்வாவேக்' தடுப்பூசி ரூ.200 முதல் ரூ.400 வரை மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக HPV தடுப்பூசி UIP திட்டத்தின் கீழ் இணைக்கப்படாவிட்டாலும் டெல்லி, சிக்கிம், பஞ்சாப் மாநிலங்களில் பரிசோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 2008ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி கிடைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.