பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்
10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது. இதனையடுத்து, ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று நேற்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்தார். இந்நிலையில், பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். இத்திட்டம் ஈரான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிற்கும் பயனளிக்கும் என்றும், மக்கள் தங்களது குறுகிய பார்வையால் இதை பார்க்க வேண்டாம் என்றும் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
"இது அனைவரின் நலனுக்காகத் தான்": எஸ் ஜெய்சங்கர்
சபாஹர் துறைமுகத்தை பெரிய விஷயங்களுக்கு உபயோகிப்பதை அமெரிக்காவே இதற்கு முன் பாராட்டி இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 'வை பாரத் மேட்டர்ஸ்' என்ற தனது புத்தகத்தை பங்களா பதிப்பில் நேற்று வெளியிட்ட எஸ் ஜெய்சங்கர், அந்த விழாவிற்கு பிறகு இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கருத்துக்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "அவர்கள் கூறிய சில கருத்துக்களை நான் பார்த்தேன். ஆனால் இது அனைவரின் நலனுக்காகத் தான் என்பதை எல்லோருக்கும் புரிய வைக்க நான் விரும்புகிறேன். மக்கள் இதை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்." என்று அவர் கூறியுள்ளார்.