மதுரையின் துணை மேயர் வீடு, ஆபிஸ் மீது தாக்குதல்; இருவர் கைது
செய்தி முன்னோட்டம்
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன்.
இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இவரது வீட்டை, 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று, அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சூழ்ந்தனர்.
தொடர்ந்து, வீட்டிற்குள் இருந்த நாகராஜன் மற்றும் அவரின் மனைவியை தாக்குவதற்காக, வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால், வீட்டின் வாசல் கதவு திறக்காததால், அந்தக்கும்பல் முன்பக்கம் இருந்த இரும்பு கேட்டை ஆயுதங்களால் சேதப்படுத்திவிட்டு, வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் உள்ளிட்ட இரண்டு டூவீலர்களை அடித்து சேதப்படுத்தி உள்ளது.
card 2
இருவரை கைது செய்துள்ளது காவல்துறை
வாகனங்களை சேதப்படுத்திய பின்னர், அந்த கும்பல், எதிரிலுள்ள அவரது அலுவலக கதவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
உடனே நாகராஜன், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.
இதுபற்றி தகவல் அறிந்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் துணை மேயர் வீடு முன்பு திரண்டனர்.
மேலும், கட்சி தொண்டர்கள் பலரும், ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
காவல்நிலையத்தை முற்றுகையிட்ட CPI-M கட்சியினர்
மதுரை துணை மேயர் நாகராஜன் மீது கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய இருவர் கைது. கூலிப்படையை ஏவி விட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தை #CPIM தோழர்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டு போராட்டம். pic.twitter.com/O665NlYWDr
— CPIM Tamilnadu (@tncpim) January 9, 2024