நியாயவிலைக் கடைகளில் கிலோ ₹35-க்கு வெங்காயம்: செப்டம்பர் 3 முதல் விற்பனை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண்மை கூட்டுறவு (NAFED) மூலம் முதற்கட்டமாக நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ₹35-க்கு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ₹70-ஐத் தாண்டி, விரைவில் ₹100-ஐ எட்டும் சூழல் உருவாகியுள்ளதால், பொதுமக்களின் சிரமத்தை குறைக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முக்கிய அம்சங்கள்
நியாயவிலைக் கடைகளில் வெங்காய விநியோகம்
வருகிற செப்டம்பர் 3, 2026 முதல் இந்த சிறப்பு விற்பனைத் திட்டம் தொடங்குகிறது.
முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் அமைந்துள்ள 8,233 நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடை) மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் வழங்கப்படும்.
கூட்டுறவு பண்டகச் சாலைகள் (Cooperative Stores) மற்றும் அமுதம் அங்காடிகள் மூலமாகவும் ஒரு கிலோ வெங்காயம் ₹35-க்கு விற்பனை செய்யப்படும்.
கண்டா எக்ஸ்பிரஸ்
மத்திய அரசின் 'கண்டா எக்ஸ்பிரஸ்'
விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மஹாராஷ்டிரா நாசிக்கில் உள்ள 1.21 லட்சம் டன் கையிருப்பில் இருந்து 'கண்டா சிறப்பு எக்ஸ்பிரஸ்' ரயில் மூலம் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு வெங்காயம் வந்திறங்கியுள்ளது.
உணவுப் பொருட்கள் விலையேற்றம் தொடர்பாகத் தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விலைக் கண்காணிப்புக் குழுவைக் கூட்டி ஆய்வு செய்து வருகிறது.
சமையலுக்கு அத்தியாவசியத் தேவையான வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.