TVK ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்; "காலம் பதில் சொல்லும்" என அறிக்கை
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த 'அவதூறு' கருத்துக்கு, ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "திமுக கொடுத்த பயத்தால்தான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அறிக்கை
ரஜினிகாந்தின் உருக்கமான அறிக்கை
தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்". "அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, திருமாவளவன் மற்றும் அரசியல், திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்." என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். மேலும், அந்த அறிக்கையின் இறுதியில், "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்ற பஞ்ச் வசனத்துடன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
ஆதரவு
அரசியல் தலைவர்களின் ஆதரவு
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு எதிராக அதிமுக, பாஜக, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ரஜினிகாந்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது அவரது தனிப்பட்ட மற்றும் உடல்நிலை சார்ந்த முடிவு என்றும், அதனை அரசியல் லாபத்திற்காகத் தவறாகச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.