LOADING...
தமிழகத்திற்கு புதிய ஆளுநர்! ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

தமிழகத்திற்கு புதிய ஆளுநர்! ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 12, 2026
01:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) பதவியேற்றுக் கொண்டார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக காலியாக இருந்த தமிழக ஆளுநர் பதவியைக் கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதலாகக் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்திருந்தார். அதன்படி நேற்றிரவு சென்னை வந்த அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

முக்கிய பிரமுகர்கள்

விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்

பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் சிறப்பித்தனர். தமிழகத்திலிருந்து நேற்று டெல்லி சென்ற ஆர்.என்.ரவி, அங்கிருந்து கொல்கத்தா சென்றடைந்தார். இன்று அவரும் மேற்குவங்க ஆளுநராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியின் இடத்திற்கு, தேர்தல் நேரத்தில் அனுபவம் வாய்ந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்புக்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement