பெல்லட் துப்பாக்கியால் காயமடைந்த இளைஞருடன் டெல்லி போலீஸ் நிலையம் முன் ராகுல் காந்தி தர்ணா
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் காயமடைந்ததாகக் கூறப்படும் இளைஞருக்கு FIR பதிவு செய்ய காவல்துறை மறுத்ததை கண்டித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஜூலை 20 'சான்சத் சலோ' போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 19 வயதான சாகில் லோசாப் என்பவருடன் ராகுல் காந்தி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். வழக்கறிஞர்களுடன் பலமுறை சென்றும் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்ததாகக் கூறியதையடுத்து, ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
சர்ச்சைகள்
'பெல்லட் கன்' பயன்பாடு: கிளம்பும் சர்ச்சைகள்
NEET தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் அப்போதைய மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, ரேபிட் ஆக்சன் போர்ஸ் (RAF) படையினர் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி காவல்துறை இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. CRPF தரப்பில் இது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இருப்பினும், மருத்துவ அறிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞரின் கண் அறுவை சிகிச்சையில் உலோக துகள்கள் அகற்றப்பட்டது தொடர்பான தகவல்கள் காவல்துறையின் மறுப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
காயமடைந்த இளைஞருக்கு நியாயம் கோரியும், காவல்துறையின் இந்த செயலற்ற தன்மையைக் கண்டித்தும் ராகுல் காந்தி நடத்திய இந்தத் திடீர் தர்ணா போராட்டம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.