குடியரசு தலைவர் ஒப்புதல்: சட்டமானது உத்தரகாண்டின் பொது சிவில் சட்டம்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். எனவே, திருமணம், விவாகரத்து, வாரிசுகள், லிவ்-இன் உறவுகள் மற்றும் அது தொடர்பான சட்டங்களை நிர்வகிக்கும் உத்தரகாண்டின் பொது சிவில் சட்ட(UCC) மசோதா 2024 சட்டமாக கையெழுத்திடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தேர்தல் அறிக்கையில் UCC நீண்டகாலமாக இருந்து வருகிறது. ராமர் கோவில் கட்டுதல் மற்றும் 370வது பிரிவை ரத்து செய்தல்(ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டம்) ஆகியவை பாஜக கட்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே அளவுக்கு UCCயும் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வருகிறது.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு இந்த சட்டம் பொருந்தாது
ராமர் கோவில் கட்டுவதும், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதும் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், தற்போது பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் நிறைவேறியுள்ளது. கடந்த மாதம் முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றில் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் பொதுவான சட்டத்தைப் வழங்கும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறப்போகிறது. இருப்பினும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு இந்த சட்டம் பொருந்தாது. இந்த சட்டத்தின் கீழ், சட்டப்பூர்வ திருமண வயது எந்த மாற்றமும் இல்லாமல், ஆண்களுக்கு 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் உள்ளது.