அத்வானி, கர்பூரி தாக்கூர் மற்றும் 3 பேருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
இரண்டு முன்னாள் பிரதமர்கள் உட்பட ஐந்து புகழ்பெற்ற நபர்களுக்கு மதிப்புமிக்க பாரத ரத்னா விருதை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். முன்னாள் பிரதமர்கள் சௌத்ரி சரண் சிங் மற்றும் பி.வி.நரசிம்ம ராவ், பிரபல விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் இன்று இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதை பெற்றவர்களில் அத்வானி மட்டுமே உயிரோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வானியின் வீட்டிற்கு செல்ல உள்ளார் குடியரசுத் தலைவர்
நரசிம்ம ராவின் விருதை அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்று கொண்டார். சௌத்ரி சரண் சிங்கின் விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்று கொண்டார். எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் நித்யா ராவ் அவரது விருதை வாங்கி கொண்டார். கர்பூரி தாக்கூரின் விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூர் பெற்று கொண்டார். அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது இல்லத்திற்குச் செல்ல உள்ளார். 96 வயதான அத்வானியின் உடல்நலக் குறைவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.