பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்
வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை அனைத்து தர மக்களும் கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் தற்போது ஆட்சியிலுள்ள திமுக'வினர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பரிசு பொருட்களை பெறுவதற்கான டோக்கன்கள் நாளை முதல் ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனவரி 9ம் தேதி முதல்வர் பரிசுத்தொகுப்பு வழங்குவதை துவக்கி வைக்கிறார்
நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பரிசு பொருட்களை வாங்கி செல்லவே இந்த டோக்கன் விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வீடு வீடாக சென்று இந்த டோக்கன்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொடுக்கப்படும் டோக்கன்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நேரம், தேதி முதலியன குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் படி, மக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசினை பெற்றுக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஜனவரி 9ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகுப்பினை மக்களுக்கு வழங்கி துவக்கி வைக்கவுள்ளார். ஜனவரி 12ம் தேதி வரை பொதுமக்கள் பரிசுத்தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.