Loading...
"சிறிய கனவுகள் இனி செல்லாது!" 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: முக்கிய அம்சங்கள்
80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை

"சிறிய கனவுகள் இனி செல்லாது!" 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: முக்கிய அம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2026
08:43 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இன்று ஒவ்வொரு இதயமும் வந்தே மாதரத்தின் தாளத்துடன் துடிக்கிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு மனதிலும் மூவர்ணக் கொடி உயர்ந்துள்ளது" எனக் குறிப்பிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு செங்கோட்டை மதில்களில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று கூறிய அவர், மகாத்மா காந்தி மற்றும் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தனது அஞ்சலியை செலுத்தினார்.

வளர்ச்சியடைந்த பாரதம்

வளர்ந்த பாரதம் 2047 மற்றும் பெரிய கனவுகள்

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "இனி சிறிய கனவுகள் போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்.

140 கோடி இந்தியர்களின் கூட்டு உழைப்பால் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு வளர்ந்த நாடாக மாற உறுதிபூணும்போது, அது நமது துணிச்சலின் அடையாளமாக மாறும்.

மேலும் உலகமே நம்மை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கும்." என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஆறுதல்

வெள்ளப் பெருக்கு பாதிப்புகளுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு

நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து பிரதமர் தனது உரையில் கவலை தெரிவித்தார்.

"சமீப நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவர்களின் துயரத்தில் நாங்கள் முழுமையாகப் பங்கெடுக்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த தேசமும் அவர்களுடன் உறுதுணையாக நிற்கும் என்ற நம்பிக்கையை நான் அளிக்கிறேன்." என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

ADVERTISEMENT

சாதனைகள்

உற்பத்தித் துறை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியின் சாதனைகள்

கடந்த 12 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், "கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்கும், காதி கிராம தொழில் உற்பத்தி 5 மடங்கும், மின்னணு உற்பத்தி 7 மடங்கும் அதிகரித்துள்ளது.

மேலும் மொபைல் போன் உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன." எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அனைத்து பிரிவு மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது என அவர் பாராட்டினார்.

ADVERTISEMENT

சுயசார்பு

பொருளாதார எழுச்சி மற்றும் சுயசார்பு இந்தியாவின் இலக்கு

நாட்டின் பொருளாதார மாற்றம் குறித்துப் பேசிய பிரதமர், "சுதந்திரத்திற்குப் பிறகு வேகம் எடுக்காமல் இருந்த இந்தியா, 2014ல் உலகளவில் பலவீனமான பொருளாதாரப் பட்டியலில் இருந்தது.

ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதிய வேகத்தைப் பெற்று மிக வேகமாக முன்னேறி வருகிறது. எனர்ஜி பாதுகாப்பு தற்போதைய தேவையாக உள்ளது.

2047க்குள் 100 கிகாவாட் அணுசக்தியை அடைவதையும், இந்த தசாப்தத்தில் 5 புதிய அணு உலைகளைத் தொடங்குவதையும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்." என்றார்.

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயுக் குழாய் இணைப்பு மற்றும் வதந்திகளுக்குப் பதில்

சமையல் எரிவாயு வசதிகள் குறித்துப் பேசிய அவர், "12 ஆண்டுகளுக்கு முன்பு 70 நகரங்களில் மட்டுமே குழாய் வழி எரிவாயு இணைப்பு இருந்தது.

ஆனால் இன்று 700 நகரங்களில் 1.75 கோடி வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது." என்றார்.

மேலும் தடுப்பூசிகள், பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது என வதந்திகளைப் பரப்பி நாட்டை பீதியில் வைத்திருக்க சிலர் முயன்றதாகவும், ஆனால் தடைகளைத் தாண்டி நாடு சுயசார்பை நோக்கி உறுதியாக முன்னேறி வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT