இந்தியாவுக்கென புதிய 'ஆப் ஸ்டோர்'.. உருவாக்கி வரும் போன்பே!
இந்தியாவைச் சேர்ந்த ஃபின்டெக் நிறுவனமான போன்பே இந்தியாவுக்கென தனி ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி மொபைல் பேமண்ட் நிறுவனமாக இருக்கும் போன்பே சமீபத்தில் தான் பின்கோடு என்ற ஆன்லைன் ஷாப்பிங் செயலி ஒன்றையும் வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு தான 'இண்டஸ் OS' என்ற ஆப் ஸ்டோர் உருவாக்கும் நிறுவத்தை போன்பே நிறுவனம் வாங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போத இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தியாவுக்கென பிரத்தியேகமான சேவையாக இந்த ஆப் ஸ்டோரை உருவாக்குவதால் 12 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இந்த ஆப் ஸ்டோர் இருக்கும் என தெரிவித்திருக்கிறது போன்பே. மேலும், இதனை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறது போன்பே.
கூகுளுக்கு மாற்றாக..
இந்தியாவின் ஆப் ஸ்டோர் சந்தையில் 97% பங்குடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது கூகுள். மேலும், இந்த ஆதிக்கத்தைப் பயன்படுத்தி பிற சேவைகளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் கூகுள் ஈடுபடுவதாக அதன் மேல் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கென தனித்த ஆப் ஸ்டோருக்கான தேவை எப்போதுமே இருக்கிறது, அதனைப் பூர்த்தி செய்ய போன்பே முயற்சி செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களை முடக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபடக்கூடாது என CCI எச்சரித்திருக்கிறது. எனவே, தங்களின் இந்த முயற்சிக்கு மற்ற மொபைல் நிறுவனங்களும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறது போன்பே. முன்னணி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை முடிந்திருக்கும் நிலையில், மற்ற நிறுவங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது போன்பே.