திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த பகுதியின் சாலை ஓரங்களில் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவவதாக தகவல்கள் வந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வழியாக செல்லும் மக்கள் புகார்களை அளித்தனர். மேலும் நெடுஞ்சாலை ஓரம் இந்த குப்பைகள் எரிக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதாகவும், அப்பகுதியாக செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்படும் சம்பவங்கள் ஏற்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து தண்டலை ஊராட்சி நிர்வாகம் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி, அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட தடை விதித்து, வேலியும் அமைத்தது.
மருத்துவ கழிவுகள் கொட்டியது குறித்து தண்டலை ஊராட்சி மன்றம் விசாரணை
மேலும் இது குறித்து தண்டலை ஊராட்சி நடத்திய விசாரணையில், திருவாரூர் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை 43 கோணிப்பைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தண்டலை ஊராட்சி தலைவர் நாகராஜன், அந்த மருத்துவமனைக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும், இல்லையெனில் காவல் துறை மூலம் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக அந்த இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்துள்ளதாகவும், எதிர்ப்பு தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஒரு சமூக ஆர்வலர் கூறியது குறிப்பிடத்தக்கது.