அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம்
தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பன்னிக்குண்டு கிராமத்தினை சேர்ந்தவர்கள் சுதாகர்-ஜெயபுவனா தம்பதி. இவர்கள் இருவரும் அமெரிக்கா கலிபோர்னியா நகரில் குடியுரிமை பெற்று சுதாகர் அங்கு மென் பொறியாளராகவும், ஜெயபுவனா அந்த நாட்டின் அரசு பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மனு என்னும் ஒரே ஒரு மகன் இருக்கிறார். அவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிலையில், தற்போது அவருக்கு வயது 22 ஆகிறது. இந்நிலையில், அந்த குடும்பம் கடந்த வாரம் தங்கள் சொந்த ஊரான மதுரைக்கு வந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் கலாச்சாரம், சொந்தபந்தங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றை தங்கள் அமெரிக்கா மகனுக்கு அறிவுறுத்த நினைத்த பெற்றோர் கலாச்சார விழா ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது.
பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் அரங்கேறியது
இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 நாட்களுக்கு முன்னரே தங்களது அனைத்து சொந்தப்பந்தங்களுக்கும் இந்த கலாச்சார விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், திருமங்கலம் அருகேயுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த விழாவினை நடத்த முடிவுச்செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அதன்படி, இன்று(ஜூலை.,2)அரங்கேறிய இவ்விழாவில் சொந்தபந்தங்கள் கலந்துகொண்டு, தமிழக பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர் ஊர்வலம், தாய்மாமன் மாலை அணிவிக்கும் நிகழ்வு, உள்ளிட்ட செய்முறைகளை செய்தனர். பின்னர், தங்கள் உறவினர்கள் அனைவரையும் தங்கள் மகனுக்கு அந்த பெற்றோர் அறிமுகப்படுத்தினர். இதனையடுத்து, இவ்விழாவில் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதன்மூலம் அந்த அமெரிக்க மகன் நெகிழ்ச்சியடைந்த நிலையில், தங்கள் மகனுக்கு தமிழக பாரம்பரியத்தினை அறிமுகப்படுத்தியதில் அந்த பெற்றோர் மனத்திருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.