பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம விருதும் ஒன்று. இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த குடியரசு தினத்தன்று 106 பேருக்கு இந்த பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த 22ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இந்த பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் அனைவருக்கும் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.
குடும்பத்தோடு தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து
இதனை தொடர்ந்து, இருளர் பழங்குடியினத்தின் பாம்புப்பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு ஜனாதிபதி பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தினார். இந்த பாம்புப்பிடி வீரர்கள் செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேறி என்னும் கிராமத்தினை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவருமே மிகவும் அபாயகரமான மற்றும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள் ஆவர். இந்நிலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர்கள் இரண்டு பேரும் தங்களது குடும்பத்தோடு இன்று(மார்ச்.,24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.