
கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு: மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு
செய்தி முன்னோட்டம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா அணிவகுப்பை நடத்தப்போவதாக 'இண்டியா' கூட்டணி அறிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டார்.
மறுநாள், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை மார்ச் 28 வரை அமலாக்கத்துறையின் காவலில் வைக்க உத்தரவிட்டது.
டெல்லி
'ஜனநாயகத்தை காப்போம்' என்ற மெகா அணிவகுப்பு
இதற்கிடையில், அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தன்னைக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு இரண்டும் சட்டவிரோதமானது என்றும், தன்னை உடனடியாக காவலில் இருந்து விடுவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை எதிர்த்து, இன்று ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தியது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்ச் 31ஆம் தேதி 'ஜனநாயகத்தை காப்போம்' என்ற மெகா அணிவகுப்பை நடத்தப்போவதாக 'இண்டியா' கூட்டணி அறிவித்துள்ளது.