வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பு மிக சிறப்பாக அரேங்கேறியது. பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 22ம் தேதி முதல் விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருநெடுந்தாண்டகம் என்னும் நிகழ்ச்சியோடு துவங்கிய இவ்விழாவில் பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வந்தது. இதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்தாம் நாளான நேற்று பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற்றது.
பக்தி பரவசத்தில் 'ராமா, கோவிந்தா' என்று கோஷமிட்ட ஏராளமான பக்தர்கள்
இரவு முதல் ரங்கநாதர் கோயிலில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், பரவசத்துடன் 'ரங்கா, கோவிந்தா' என்று கோஷமிட்டனர். ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருகொட்டகையில் எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இம்முறை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.