தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி மாவட்டம், ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150வது பிறந்தநாள்விழா மற்றும் காணும் பொங்கல் விழா முதலியன புதுவை ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி ஆளுநர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், "சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார். மேலும், விடுதலை போராட்டத்தின்பொழுது பாரதியார், வாஞ்சிநாதன், அரவிந்தர் போன்றோருக்கு புதுச்சேரி தாயின் மடிபோல் அரவணைத்தது என்றும், ஆரோ நகரில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டதாகவும், இத்தனை ஆண்டுகள் கழிந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதையெல்லாம் சரிசெய்ய தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
'தமிழ்நாடு என்னும் பெயருக்கு பெரும் சரித்திரம் இருக்கிறது' - புதுவை ஆளுநர் தமிழிசை
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்னும் பெயருக்கு பெரும் சரித்திரம் இருக்கிறது, பல போராட்டத்திற்கு பிறகே இந்த பெயர் கிடைத்தது. அதனை அவ்வளவு எளிதாக புறம் தள்ளிவிட முடியாது என்று கூறினார். மேலும், 'நான் மக்களுக்காக தான் செயல்படுகிறேன். கோப்புகளை மக்கள் முகங்களாகவே நான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் அளிக்கப்படாதபட்சத்தில், புதுவையில் முதல்வருடன் சேர்ந்து வழங்க உள்ளதாக கூறியுள்ளார். மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் பார்க்கப்படுவதில்லை என்று கூறிய அவர், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.