பி.ஏ, பி.காம் பட்டப் படிப்புகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லை; நிதி ஆயோக் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பி.ஏ, பி.காம் மற்றும் பி.எஸ்.சி போன்ற பாரம்பரிய பட்டப் படிப்புகளை படிக்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் கல்விக்கும், வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுவதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது. விக்சித் பாரதத்திற்கான திறன்களை மறுசீரமைத்தல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போதைய உயர்கல்வி முறை மாணவர்களுக்கு சந்தைக்கேற்ற நடைமுறைத் திறன்களை வழங்கத் தவறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகுதியான வேலை
8.25% பட்டதாரிகளுக்கு மட்டுமே தகுதியான வேலை
பொருளாதார ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் வெறும் 8.25 சதவீதப் பட்டதாரிகள் மட்டுமே தங்களின் கல்வித் தகுதிக்கு இணையான வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
நாட்டில் ஒட்டுமொத்தப் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ள நிலையில், பட்டதாரிகளிடையே வேலையின்மை 13 சதவீதமாகவும், பெண் பட்டதாரிகளிடையே 20.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
நாட்டில் உள்ள 3.4 கோடி பட்டப்படிப்பு மாணவர்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி பாடப்பிரிவுகளிலேயே பயின்று வருகின்றனர்.
திறன் பற்றாக்குறை
அரசு வேலைக்கான போட்டி மற்றும் திறன்களின் பற்றாக்குறை
பெரும்பாலான மாணவர்கள் அரசுப் பணிகளுக்கான தகுதியை பெறுவதற்காகவே இத்தகைய பொதுவான பட்டப் படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, வெறும் 55,000 அரசுப் பணியிடங்களுக்கு 1.86 கோடி விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
தொழில்துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்கள் இல்லாததால், தொழில் நிறுவனங்கள் இத்தகைய பட்டதாரிகளைப் பணியில் அமர்த்தத் தயங்குகின்றன.
இதனால் ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பட்டப்படிப்பு மையங்களில் உடனடியாகக் கட்டமைப்பு மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தீர்வுகள்
நிதி ஆயோக் பரிந்துரைக்கும் முதன்மையான தீர்வுகள்
இந்த சிக்கலுக்குத் தீர்வாக, தொழில் நிறுவனங்களின் பங்கேற்புடன் கூடிய பொது-தனியார் கூட்டு மாதிரி (PPP Model) பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.
பாரம்பரியப் படிப்புகளுக்குப் பதிலாக பி.காம் அனலிட்டிக்ஸ், பி.ஏ ஹாஸ்பிட்டாலிட்டி போன்ற சிறப்பு பாடப் பிரிவுகளை உருவாக்க வேண்டும்.
மேலும், படிக்கும் போதே பயிற்சி பெறும் அப்ரண்டிஸ்ஷிப் (AEDP) முறையை விரிவுபடுத்தி, நெகிழ்வுத்தன்மை கொண்ட பகுதிநேர மற்றும் சான்றிதழ் படிப்புகளைத் தொடங்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.