அதிமுகவின் கூட்டணிக்கு புதுபெயர்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2024 பாராளுமன்ற தேர்தல் பல்வேறு காரணங்களால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக'வின் கூட்டணி குறித்த திடீர் முடிவால் தற்போது தமிழகத்திலும் இத்தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று(செப்.,27)சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர், கட்சிக்கூட்டணி குறித்து மேலும் தான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது, அது குறித்தும் தான் கருத்து கூறப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இணைய போகிறார்கள்?இக்கூட்டணிக்கு புதுப்பெயர் வைக்கப்படுமா?என்றும் கேள்விகள் கேட்டகப்பட்டது. அதற்கு அவர்,"தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளதால், இதுகுறித்த முடிவுகள் அதன் நெருக்கத்தில் தான் எடுக்கப்படும்"என்று கூறியுள்ளார்.