சேலையால் தப்பிய உயிர்கள்! நேபாள வெள்ளத்தில் 21 தமிழ்நாட்டு யாத்ரீகர்கள் தப்பிய நெகிழ்ச்சிச் சம்பவம்
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 21 கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள், ஒரு புடவையை அவசரகாலக் கயிறாகப் பயன்படுத்தி செங்குத்தான சேற்று சரிவிலிருந்து தப்பிப் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேபாள ராணுவம் மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் 21 யாத்ரீகர்களும் பாதுகாப்பாக விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். திபெத் எல்லையை ஒட்டிய இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக போதேகோசி ஆற்றில் உருவான இந்தத் திடீர் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தால், சித்வான், நவல்வராசி, கோர்கா, ரசுவா உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்பு
சேலையால் சாத்தியமான அசாத்திய மீட்பு
கடந்த ஆகஸ்ட் 26 அன்று, திமுரே பகுதி அருகே பஸ்ஸில் பயணித்த தமிழ்நாட்டு யாத்ரீகர்கள், பாறை மற்றும் சேறு கலந்த வெள்ளப்பெருக்கைக் கண்டு அலறியடித்து வெளியேறினர்.
மயிலாடுதுறையை சேர்ந்த ரத்னகுமார் மற்றும் அவரது மனைவி பூங்குழலி ஆகிய இருவரும் முதலில் உயரமான மேட்டுப் பகுதிக்குச் சென்று தப்பினர்.
கீழே சேற்றுச் சரிவில் ஏற முடியாமல் பல பெண்கள் தவிப்பதைக் கண்ட பூங்குழலி, தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து கீழே வீசினார்.
மேலே இருந்த ரத்னகுமார் மீண்டும் அபாயகரமான பகுதிக்குச் சென்று, சிக்கித் தவித்த பெண்களின் இடுப்பில் அந்தச் சேலையைக் கட்டி, மேலேயிருந்த பூங்குழலியின் உதவியோடு அனைவரையும் ஒவ்வொன்றாக மேடான பகுதிக்கு இழுத்து உயிரைக் காப்பாற்றினார்.
உயிரிழப்பு
பேரழிவில் நேபாளம்: 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. (சீனா தரப்பில் 16 பேர் பலி). 4,247 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர் (இதில் 591 வெளிநாட்டினரும் அடங்குவர்).
சீனா - நேபாள இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையான போதேகோசி வழித்தடமும், ரசுவாகதி எல்லைக் கடப்பும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
தற்போது இந்திய அரசிடமிருந்து மீட்புக் குழுவினர், நிவாரணப் பொருட்கள் மற்றும் DNA பரிசோதனைக்கான தடயவியல் நிபுணர்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுத் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.