LOADING...
நீதிமன்றம் போலவே செட் போட்டு ஏமாற்றிய கும்பல்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.42 லட்சம் இழந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி 
டிஜிட்டல் அரெஸ்ட் வலையில் சிக்கிய ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரூ.42 லட்சம் இழப்பு

நீதிமன்றம் போலவே செட் போட்டு ஏமாற்றிய கும்பல்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.42 லட்சம் இழந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி 

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
07:06 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தைச் சேர்ந்த 83 வயதான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர், டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் நூதன சைபர் கிரைம் மோசடியில் சிக்கி 42.50 லட்ச ரூபாயை இழந்துள்ளார். சுமார் 48 மணிநேரம் அவரை வீடியோ கால் மூலமாகவே மிரட்டி, வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து இந்த மோசடியைப் பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். இது குறித்து அவரது மகன் அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். டிசம்பர் 8 ஆம் தேதி காலை, அந்த முதியவருக்குத் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அவரது மொபைல் எண் மூலம் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதாகவும் மிரட்டியுள்ளனர்.

மோசடி

மோசடி நடந்த விதம்: போலி நீதிமன்றம் மற்றும் நீதிபதி

பின்னர் வீடியோ காலில் பேசிய மோசடிக்காரர்கள், ஒரு அறையை நீதிமன்றம் போல அலங்கரித்து, அதில் ஒருவரை நீதிபதி இருக்கையில் அமர வைத்துள்ளனர். அவர் மீது 27 வழக்குகள் இருப்பதாகவும், ரகசிய விசாரணை நடப்பதால் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கூறி அந்த முதியவரை மிரட்டியுள்ளனர். வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, பணத்தை ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்றச் சொல்லியுள்ளனர்.

டிஜிட்டல் அரெஸ்ட்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியை தடுத்து நிறுத்திய வங்கிகள் 

முதியவரால் நடக்க முடியாது என்பதால், அவரது மனைவி வங்கிக்கு சென்று தனது பெயரில் இருந்த நிரந்தர வைப்புத் தொகையை எடுத்து மோசடிக்காரர்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் மீண்டும் பணம் கேட்டபோது, டிசம்பர் 11 ஆம் தேதி மீண்டும் வங்கிக்குச் சென்ற அந்தப் பெண்ணிடம் வங்கி ஊழியர்கள் விசாரித்துள்ளனர். அப்போதுதான் இது டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்பது தெரியவந்தது. உடனடியாக வங்கி ஊழியர்கள் மேற்கொண்டு பணப் பரிமாற்றம் நடப்பதைத் தடுத்து நிறுத்தினர்.

Advertisement

எச்சரிக்கை

பொதுமக்களுக்கான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு

சைபர் கிரைம் அதிகாரிகள் இது போன்ற மோசடிகள் குறித்துப் பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்: டிஜிட்டல் அரெஸ்ட் என்பது சட்டப்படி செல்லாது. சிபிஐ அல்லது காவல் துறை ஒருபோதும் வீடியோ கால் மூலம் யாரையும் கைது செய்யாது அல்லது வீட்டிலேயே சிறை வைக்காது. எந்தவொரு அரசு அமைப்பும் பணத்தைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி உங்கள் கணக்கில் இருந்து பணத்தை மாற்றச் சொல்லாது. வீடியோ காலில் போலீஸ் சீருடை அல்லது நீதிமன்றம் போலக் காட்டப்பட்டாலும் பயப்படாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு 1930 என்ற எண்ணிற்குப் புகார் செய்யவும்.

Advertisement