120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை
120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை விதித்து நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜூன்-14) உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்குகளுக்கு பிறகு தமிழகத்தையே கதிகலங்க வைத்த வழக்கு இந்த நாகர்கோவில் காசியின் வழக்காகும். நாகர்கோவிலை சேர்ந்த காசி(28) கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி அவர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் காசி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், இதனால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனர் என்பது முதலில் தெரியவில்லை. அதன்பிறகு நடந்த தீவிர விசாரணையில் 120 பெண்களை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருப்பது தெரியவந்தது.
நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம்
மேலும், காசிக்கு உடைந்தையாக இருந்த அவரது தந்தை தங்கபாண்டியனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் போது, காசியின் லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்களும் 1900 ஆபாச புகைப்படங்களும் இருந்ததை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காசியின் மீது போக்ஸோ, பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கிற்கு நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 120 பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததற்காக நாகர்கோவிலை சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.10 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.