நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி: ஓய்வுபெற்ற நபரிடம் ₹1.47 கோடி அபேஸ்
செய்தி முன்னோட்டம்
மும்பையில், ஓய்வுபெற்ற ஒருவரிடம் போலி பங்குச் சந்தை வர்த்தகத் திட்டங்கள் மூலம் ₹1.47 கோடி ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மோசடி கும்பல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புகைப்படத்தைப் பயன்படுத்திச் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து, அந்தத் திட்டத்திற்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி, அந்த நபரை முதலீடு செய்யத் தூண்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபர், ₹21,000 முதலீடு செய்தால் ₹60,000 வரை 'உறுதியான லாபம்' கிடைக்கும் என்று ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இந்த விளம்பரத்தால் கவரப்பட்டு, அவர் தனது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து, மீனாட்சி என்ற பெண் அப்ஸ்டாக்ஸ் செக்யூரிட்டீஸின் பிரதிநிதி என்று கூறி வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, முதலீட்டுச் செயல்முறைக்கு வழிகாட்டியுள்ளார்.
ஏமாற்றம்
லாபத்தைக் காட்டி ஏமாற்றம்
மீனாட்சி மற்றும் அவரது கூட்டாளிகள், 'SBI வெல்த் மைண்ட்செட்', 'சேவெக்ஸா' மற்றும் 'ரூபிகான் ரிசர்ச் லிமிடெட்' போல் காட்டிக்கொண்ட போலி ஐபிஓ (IPO) உட்படப் பல போலித் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அந்த நபரை நம்பவைத்துள்ளனர். இதனால், அவர் பல பரிவர்த்தனைகள் மூலம் மொத்தமாக ₹1.47 கோடியை மோசடி கும்பலுக்கு மாற்றியுள்ளார். சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு மெய்நிகர் வர்த்தக தளத்தை உருவாக்கியிருந்தனர். அதில், அந்த நபரின் முதலீடு ₹6.02 கோடியாக வளர்ந்துள்ளதாகப் போலியாகக் காட்டப்பட்டுள்ளது. அவர் லாபத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, மோசடிக் கும்பல் 'உத்தரவாதக் கட்டணமாக' மேலும் ₹90 லட்சம் கேட்டபோதுதான், தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
புகார்
சைபர் கிரைமில் புகார்
உடனடியாக மும்பையின் மத்திய சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இந்தச் சதிச் செயலை அரங்கேற்றிய சைபர் மோசடி கும்பலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நிர்மலா சீதாராமன் ஏற்கனவே, டீப் ஃபேக் போலி (Deepfake) வீடியோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் மோசடிகள் குறித்து முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.