12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8ம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வு எழுதியவர்களின் மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறியதன் அடிப்படையில், மாணவர்கள் அதற்கு விண்ணப்பித்தனர். இதன் மூலம் விடைத்தாள்களை பெற்ற பள்ளி மாணவர்கள் மூலம் விடைத்தாள்களில் மதிப்பீடு செய்ததில் அதிகளவு குளறுபடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாணவர்களின் விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண்கள்
இதனை தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் இதே போல் 5 முதல் 7 மதிப்பெண்கள் வரை கூடுதலாக கொடுத்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இது பள்ளிக்கல்வித்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்க இது போன்ற குளறுபடி வேண்டுமென்றே செய்யப்பட்டதா? அல்லது கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இந்த குளறுபடி நடந்துள்ளதா? என்னும் கேள்வியினை தற்போது கல்வியாளர்கள் எழுப்பி வருகிறார்கள். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வேளாண்மை, கலை, அறிவியல் உள்ளிட்ட பல உயர் படிப்பிற்கான சேர்க்கையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது. எனவே இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.