இந்தியாவில் புதிய சிப் தொழிற்சாலையை தொடங்குகிறது அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவைச் சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியாவில் 825 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,760 கோடி) முதலீட்டில் புதிய அசெம்பிளி தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசின் உதவியுடன் மொத்தம் 2.75 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22,159 கோடி) முதலீட்டில் உருவாகவிருக்கிறது மைக்ரான் டெக்னாலஜிஸின் இந்த புதிய தொழிற்சாலை.
இந்த தொழிற்சாலைக்கான மொத்த முதலீட்டில் 50%-த்ததை மத்திய அரசும், 20%-தத்தை குஜராத் மாநில அரசும் வழங்கவிருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்தியா
5,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கும் மைக்ரான் டெக்னாலஜிஸ்
குஜராத்தின் சனந்த் நகரில் உருவாகும் இந்த புதிய தொழிற்சாலையின் முதற்கட்டப் பணிகள் இந்த வருடம் தொடங்கி, அடுத்த வருட இறுதியில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ன் இறுதியிலேயே இந்தத் தொழிற்சாலை இயங்க தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2025-க்கு பிறகு இந்த தொழிற்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடையும்.
இந்த இரண்டு கட்டப் பணிகளும் நிறைவடைந்த பிறகு, இந்த தொழிற்சாலையானது 5,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்டம் முன்னதாகவே மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டிருந்தாலும், மோடியின் அமெரிக்க பயணத்தையடுத்தே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.