Loading...
12 ஆண்டுகளை நிறைவு செய்த மன் கி பாத்: 139-வது பகுதியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை
12 ஆண்டுகளை நிறைவு செய்த மன் கி பாத் 139-வது உரையில், அடித்தட்டு மக்களின் சாதனைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

12 ஆண்டுகளை நிறைவு செய்த மன் கி பாத்: 139-வது பகுதியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி உரையான 'மன் கி பாத்' நிகழ்ச்சி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் 139-வது பகுதியில் அடித்தட்டு மக்களின் புதுமைகள், கிராமப்புற மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட இந்த வானொலி நிகழ்ச்சி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாதாரண மக்களின் பங்களிப்புகளையும் உத்வேகம் தரும் கதைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பயணமாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பெண்கள் மேம்பாடு

இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பஞ்சாபின் மால்வா பகுதியில் ரசாயனமில்லா பருத்தி சாகுபடி மற்றும் பாரம்பரிய நெசவை ஊக்குவித்து வரும் நவ்-திரிஞ்சன் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், இதன் மூலம் ரமண்தீப் கவுர், ரேகா ராணி உள்ளிட்ட பெண்கள் தற்சார்பு அடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, உத்தரகாண்டின் தெஹ்ரி கர்வால் பகுதியில் வறண்டுபோன 'ஹேவல்' நதியை மீட்டெடுக்க மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மறுஊட்டல் மற்றும் மரம் நடுதல் பணிகளில் ஈடுபட்ட கிராம மக்களையும் நிர்வாகத்தையும் அவர் பாராட்டினார்.

மேலும், உள்நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிக்கும் வோக்கல் ஃபார் லோக்கல் திட்டத்தின் மூலம் பீகாரின் மகானா கிரீஸுக்கும், கர்நாடகாவின் துவரம்பருப்பு மாலத்தீவுக்கும் ஏற்றுமதியாவதை நினைவு கூர்ந்த பிரதமர், காதி விற்பனை இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியன்று ரூ.28 கோடியைத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆராய்ச்சி

தொழில்நுட்ப மருத்துவம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி

தொலைதூரப் பகுதிகளில் மருத்துவ சேவையை எளிதாக்கியுள்ள இ-சஞ்சீவனி தளம் இதுவரை 50 கோடி ஆலோசனைகளை வழங்கிப் பயனளித்துள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இதன்மூலம் அந்தமான் பழங்குடியினர், லடாக் மற்றும் லட்சத்தீவு மக்கள் உரிய நேரத்தில் தீவிர சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.

அத்துடன், சென்னை ஐஐடியின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம், 'பரம் சக்தி' சூப்பர் கணினி உதவியுடன் 100 மனித மூளைகளை முப்பரிமாணத்தில் ஆய்வு செய்து அல்சைமர் நோய்க்கான சிகிச்சைக்கு வழிவகை செய்யும் முன்னோடி முயற்சியைப் பாராட்டினார்.

மேலும், தங்கத்தின் தூய்மையறிதல், கடல் மேல் பறக்கும் வாகனம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட இளம் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கங்களையும் அவர் வெகுவாக வரவேற்றார்.

ADVERTISEMENT

தீபாவளி வாழ்த்து

வரலாற்று ஆளுமைகள் மற்றும் ஒற்றுமை ஓட்டம்

நவம்பர் 4 அன்று வரவிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர் பாய் பரமானந்தின் 150-வது பிறந்தநாள் மற்றும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படவுள்ள ஃபைபர் ஆப்டிக்ஸின் தந்தை நரிந்தர் சிங் கபானியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

மகரிஷி வால்மீகியின் சிந்தனைகளை நினைவுகூர்ந்த பிரதமர், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள 'ஒற்றுமைக்கான ஓட்டம்' (Run for Unity) நிகழ்வில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிறைவாக, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT