மணிப்பூரில் மீண்டும் மக்களாட்சி; ஓராண்டுக்கு பின் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக 2025 பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, சரியாக ஒரு ஆண்டிற்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது. மணிப்பூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் அமைக்கும் வகையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்வதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய். கெம்சந்த் சிங் (62), இன்று மாலை 6 மணியளவில் இம்பாலில் உள்ள லோக் பவன் மாளிகையில் மணிப்பூரின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் அஜய்குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
விவரங்கள்
துணை முதல்வராக பதவியேற்கவிருக்கும் குக்கி-ஜோ சமூகத்தை சேர்ந்த MLA
கங்கொக்பி தொகுதியை சேர்ந்த குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏவான நெம்சா கிப்ஜென் (Nemcha Kipgen) துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். மணிப்பூர் வரலாற்றில் ஒரு குக்கி சமூகத்தை சேர்ந்த பெண் இந்த உயரிய பதவியை வகிப்பது இதுவே முதல்முறை. மேலும், நாகா மக்கள் முன்னணியை (NPF) சேர்ந்த ஒருவரும் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னணி
ஓராண்டாக குடியரசு தலைவர் ஆட்சி
கடந்த 2023 மே மாதம் தொடங்கிய இன வன்முறையைக் கையாளத் தவறியதாக எழுந்த விமர்சனங்களால், முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங் 2025 பிப்ரவரியில் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அங்கு ஓராண்டாக குடியரசு தலைவர் ஆட்சி நீடித்து வந்தது. தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், மாநிலத்தில் இயல்பு நிலையைத் திரும்புவதும், பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதும் புதிய அரசின் சவாலாக இருக்கும். சிங்ஜமேய் தொகுதியின் எம்.எல்.ஏவான கெம்சந்த் சிங், ஏற்கனவே மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளரான இவர், மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையேயும் நற்பெயர் பெற்றவர் என்பதால், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட இவர் சரியான தேர்வாகக் கருதப்படுகிறார்.