பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து
பெங்களூரில் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் வரை தூண் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், அந்த சாலை வழியே நேற்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவர் தங்கள் இரு குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது நாகவாரா பகுதியில் இவர்கள் வரும் பொழுது அங்கு கட்டப்பட்டு கொண்டிருந்த 40 அடி தூண் சரிந்து விழுந்துள்ளது. இதில் லோஹித் (32), அவரது மனைவி தேஜஸ்வினி (28), மகள் வீனா (2) மற்றும் மகன் விஹன் (2) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தோர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மெட்ரோ கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, தேஜஸ்வினியும் அவரது 2 வயது மகன் விஹனும் பரிதாபமாக உயிரிழந்தனர். லோஹித்தும் அவரது மகள் வீனாவும் தீவிரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து லோஹித் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் என் மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது இந்த கோர சம்பவம் நடந்தது. நான் என் வாழ்வில் அனைத்தையும் இழந்து விட்டேன்" என்று கதறியுள்ளார். மேலும், இனிமேலாவது இது போன்று நடக்காமல் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். லோஹித்தின் தந்தை, மெட்ரோ கட்டுமான பணி ஒப்பந்ததாரர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவே, கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.