கோவைக்கு வந்த மக்னா காட்டு யானை-நொடி பொழுதில் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள்
விவசாய பயிர்களை சேதப்படுத்தியதாக கூறி தமிழகத்தில் உள்ள தருமபுரி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் மறுநாளே அங்கிருந்து கீழே இறங்கிய அந்த மக்னா காட்டுயானை சேத்துமடை பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளது. அங்கிருந்து சுமார் 1000 கிமீ தூரம் அந்த யானை கிணத்துக்கடவு வழியே நடந்தே வந்துள்ளது. அதனை பின் தொடர்ந்து வனத்துறையினரும் குனியமுத்தூர் வரையே வந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் இருந்து கோவை நகருக்குள் யானை புகுந்துள்ளது. கோவை நகருக்குள் புகாமல் யானையினை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் அனைத்தும் வீணானது என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நூலிழையில் உயிர்தப்பிய காட்சிகள்
கேரளா செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வரும் வழியில் நின்ற யானை
இதனை தொடர்ந்து கோவைக்குள் புகுந்த அந்த காட்டு யானை மதுக்கரை அருகே ஓர் தண்டவாளத்தில் திடீரென நின்றுள்ளது. அப்போது அந்த வழியாக கேரளா செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானையை காக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சத்தங்களை எழுப்பி அதனை வேறு பக்கம் விரட்ட கடும் முயற்சி எடுத்துள்ளனர். நொடி பொழுதில் யானை அந்த தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி உயிர்தப்பும் அந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை பாதுகாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என்று தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.