மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
2023ம் ஆண்டு வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில், மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுகரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படுவதாகவும், இதனுடன் வேஷ்டி சேலை விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பொங்கல்பரிசு தொகுப்பினை இன்று (ஜனவரி 9ம் தேதி) மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி துவக்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று திடீரென நள்ளிரவில் தீ பற்றி எரிந்துள்ளது. திடீரென தீ பற்றி எரிவதை கண்ட அந்த வளாகத்தில் இருந்த இரவுநேர ஊழியர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தீயில் கருகிய 50,000 வேஷ்டி, சேலைகள்- தடய நிபுணர்கள் ஆய்வு
இதனையடுத்து தல்லாகுளம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்த விசாரணையில், நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வைத்திருந்த சுமார் 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் தீ பற்றி எரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இன்று பரிசு பெட்டகத்திற்கான டோக்கன் வழங்க திட்டமிட்டருந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.