மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட்
கடந்த 2020ம் ஆண்டு, பழனியை சேர்ந்த பழனிச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தான் கடந்த 1992-96வரையிலான கல்வியாண்டில் திண்டுக்கல் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு படித்ததாகவும், ஆனால், தனது பெயர் தேர்ச்சிப்பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பல்கலைக்கழகத்தில் கேட்ட போது, முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாத காரணத்தினால் அவரது பெயர் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து கடந்த 2014ம்ஆண்டு பழனிச்சாமி அனைத்து தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்பின்னர் மீண்டும் தேர்ச்சிச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் கேட்டு இவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால்,இதுவரை மதிப்பெண் பட்டியல் எதுவும் பல்கலைக்கழகம் வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வரும் 7ம் தேதி பதிவாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு
மேலும் சான்றிதழை வழங்குமாறு உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்னர் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் பலமுறை கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் தேர்ச்சிக்கான சான்றிதழினைக்கேட்டு விண்ணப்பித்துள்ளார், கோரிக்கை மனு மற்றும் வழக்குப்பதிவும் செய்துள்ளார். எனவே மதிப்பெண் சான்றிதழை உடனே அவருக்கு பல்கலைக்கழகம் வழங்கவேண்டும். அவ்வாறு வழங்காவிடில், பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு இன்று(ஜூலை.,1)மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்ச்சி சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் கோபமடைந்த நீதிபதி காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். மேலும் மதுரை காவல்துறை கண்காணிப்பாளர்மூலம் இந்த பிடிவாரண்ட் செயல்படுத்தப்பட்டு வரும் 7ம் தேதி பதிவாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.