கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு
வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்விற்கு முன்னர் இந்த வழக்கின் விசாரணை வந்த நிலையில், "மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாகவே உத்தரவிட்டது. ஆனால், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை தாராளமாக கிடைக்கிறது" என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு "பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை" என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தார்கள்.
பிளாஸ்டிக் தடைக்கு நிரந்தர படைகளை அமைக்க உத்தரவு
இதனையடுத்து, "கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்" என்று கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், அவ்வழி செல்லும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்யவேண்டும். சோதனைக்கு வாகனங்களை நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நிரந்தர படைகளை அமைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.