மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் அம்பலமான போலீஸ் கொடூரம்
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று மிகக்கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிறையில் உள்ள காவலர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளித்த சிபிஐ, சில முக்கிய உண்மைகளை நீதிமன்றத்தில் உடைத்தது. அதன்படி, அஜித்குமார் மீது நிகிதா என்பவர் கொடுத்த நகை திருட்டு புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார், காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்தார் என்பது உறுதியாகி உள்ளது உள்ளதாக கூறியுள்ளது இந்த கொலையில் டிஎஸ்பி, ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 10 காவலர்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
நீதிபதி ஸ்ரீமதியின் கண்டனம்
சிபிஐ-யின் அறிக்கையைக் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, மிகுந்த மனவேதனையுடன் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். "ஏதுமில்லாத விஷயத்திற்காக ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள், இதைக் கேட்கும்போதே மனமே பதறுகிறது. ஒன்றுமே இல்லாத வழக்கிற்காக ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளனர்" என்று சாடினார். மேலும், "இந்த வழக்கு முடியும் வரை சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். இச்சம்பவம் காவல்துறையினருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்று கூறி, ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.