பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று(பிப்.,10) துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் திறந்து வைத்ததோடு, இது குறித்த புத்தகம் ஒன்றினையும் வெளியிட்டார். அதன் பின்னர் பேசிய அவர், தமிழக பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம், 2006ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் துவங்கப்பட்டது. கண்காட்சியை பார்த்ததில் புதிய செய்திகளை தெரிந்து கொள்வதோடு, வரலாற்று சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறினார். மேலும் புகைப்படங்கள் மிக உயிரோட்டமாக உள்ளது என்று கூறிய அவர், குறிப்பிட்ட சம்பவங்கள் எந்த இடத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை தெளிவாக உணர்த்தும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.
புகைப்பட சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு
தொடர்ந்து பேசிய அவர், செய்திகளை படித்து தெரிந்துகொள்வதோடு, ஒரு புகைப்படத்தை பார்த்ததுமே செய்தி என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால் தான் பேனாவை போல் புகைப்படங்களும் சக்தி மிக்கது என்று கூறப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை குறித்த கோரிக்கை வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எம்.எல்.ஏ.எழிலன் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். சென்னையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடைபெறும் என்றும், தினமும் காலை 10 மணி முதல் 6 மணிவரை பார்வையிட அனுமதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.