கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்டக்ஷன் ஸ்டவ்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கிய மக்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவியுள்ளது. இதனால், பலரும் மாற்று ஏற்பாடாக இண்டக்ஷன் அடுப்புகளை (Induction Stoves) வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, சர்வதேச எரிசக்தி விநியோகப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமார் 60 சதவீதத்தை இந்த வழியாகவே இறக்குமதி செய்கிறது. தற்போது விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடையால், சில நகரங்களில் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எல்பிஜி
சந்தையில் நிலவும் பரபரப்பு:
இதனால் மக்கள் இன்டக்ஷன் அடுப்புகளை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் இண்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை 25 முதல் 30 மடங்கு வரை அதிகரித்துள்ளது. பல முன்னணி பிராண்டுகளின் மாடல்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. வீடுகளில் சிலிண்டர் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில், மக்கள் இண்டக்ஷன் அடுப்புகளையும் மின்சார அரிசி குக்கர்களையும் அவசரத் தேவைக்காக வாங்கி வைத்து வருகின்றனர். வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டதால், உணவகங்கள் பலவும் மின்சார அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளன.