Loading...
பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு இனி சிறை தண்டனை நிச்சயம்: கேரள அரசின் புதிய சட்டம்
பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்

பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு இனி சிறை தண்டனை நிச்சயம்: கேரள அரசின் புதிய சட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2026
03:35 pm

செய்தி முன்னோட்டம்

பெற்றோரின் சொத்துகளை முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைக் கைவிடும் மற்றும் துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் முதியவர்களுக்காக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன இல்லத்தைத் திறந்து வைத்து பேசியபோது, மாநில அரசு நிறைவேற்றியுள்ள முதியோர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இந்த கடுமையான விதிமுறையை அவர் சுட்டிக்காட்டினார்.

முதியோர் நலன்

முதியோர் நலனுக்கான தனித் துறை

தங்கள் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எடுத்த முதல் முடிவே முதியவர்களுக்கென ஒரு தனித் துறையை உருவாக்கியதுதான் என்றும், நாட்டிலேயே இத்தகைய முன்னோடி முயற்சியை மேற்கொண்ட முதல் மாநிலம் கேரளாதான் என்றும் முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் முதியவர்களுக்கு பல்வேறு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கும் சிறப்பான சட்டத்தை தனது அரசு நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், பெற்றோரின் சொத்துகளை அனுபவித்துவிட்டு அவர்களைத் தவிக்கவிடும் நபர்கள் எவ்வித சந்தேகமுமின்றி சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

சமூகக் கலாசாரம்

புதிய சமூக கலாசாரத்தின் அவசியம்

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை வருங்கால சந்ததியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று வி.டி. சதீசன் வலியுறுத்தினார்.

பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதை தான் நேரில் பார்த்துள்ளதாகவும், ஆனால் பிள்ளைகள் பெரிய நிலையை அடைந்த பிறகு பெற்றோரைப் புறக்கணிப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய கலாசாரம் கேரளத்தில் இருக்கவே கூடாது என்றும், பெற்றோரை அன்புடன் அருகில் வைத்துப் பராமரிக்கும் ஒரு புதிய கலாசாரம் உருவாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கேரளத்தில் எந்தவொரு முதியவரும் தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதே தனது மிகப்பெரிய கனவு எனவும் முதல்வர் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT