அலுவலக அறையில் முறையற்ற நடத்தை; கர்நாடக டிஜிபி அந்தஸ்து அதிகாரி ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூத்த IPS அதிகாரி ராமச்சந்திர ராவ், தனது அலுவலக அறையிலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீருடையில் இருக்கும்போதே அலுவலக நேரத்தில் இத்தகைய செயல்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரையடுத்து, கர்நாடக அரசு அவரை இன்று பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா நேற்று விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், காவல்துறை கண்ணியத்திற்கு விரோதமாக செயல்பட்டதாகக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சதி
தன் மீது திட்டமிட்டு செய்த சதி என்கிறார் அதிகாரி
எதிர்க்கட்சிகளின் கடும் அரசியல் அழுத்தம் மற்றும் பொதுமக்களின் கண்டனங்களுக்கு மத்தியில் இந்தச் சஸ்பெண்ட் உத்தரவு வெளியாகியுள்ளது. இருப்பினும், தன் மீதான புகார்களை ராமச்சந்திர ராவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானவை மற்றும் மார்ஃபிங் (Morphed) செய்யப்பட்டவை. எனது புகழைக் கெடுப்பதற்காகச் சிலர் திட்டமிட்டுச் செய்த சதி இது. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்," என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் மாநில உள்துறை அமைச்சரை சந்தித்து விளக்கம் அளித்த போதிலும், அரசின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ராமச்சந்திர ராவ், சில மாதத்திற்கு முன்னர் தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ்வின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.