சுயசார்பு இந்தியாவில் மற்றொரு மைல்கல்! டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா பாதிப்பைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டெட்டனஸ் (Td) மற்றும் அடல்ட் டிப்தீரியா தடுப்பூசியை சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், சுகாதாரத் துறையில் சுயசார்பை எட்டவும் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
முக்கியத்துவம்
டெட்டனஸ் தடுப்பூசியின் முக்கியத்துவம்
டெட்டனஸ் என்பது தசைப்பிடிப்பு மற்றும் சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்கும் ஒரு தீவிர நோயாகும். டிப்தீரியா என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தொற்றாகும். இதற்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்த டெட்டனஸ் டாக்ஸாய்டு (TT) தடுப்பூசிக்குப் பதிலாக, இப்போது இந்த டெட்டனஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது. இது டெட்டனஸுடன் சேர்த்து, பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய டிப்தீரியா பாதிப்பையும் தடுக்கும் திறன்கொண்டது. உலக சுகாதார நிறுவனம் 2006 ஆம் ஆண்டே TT க்கு பதிலாக Td தடுப்பூசிக்கு மாற பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு
உற்பத்தியும் விநியோகமும்
இந்தத் தடுப்பூசி மத்திய அரசின் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் விநியோகிக்கப்படும். முதல் கட்டமாக வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 55 லட்சம் டோஸ்கள் UIP திட்டத்திற்கு வழங்கப்படும். பின்னர், வரும் ஆண்டுகளில் இதன் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். ஜிஎம்பி தரநிலைகளின் கீழ் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நாட்டின் முதல் அரசு நிறுவனம் என்ற பெருமையை கசௌலி மத்திய ஆராய்ச்சி நிறுவனம் பெற்றுள்ளது.
சாதனை
சுகாதாரத் துறையில் இந்தியாவின் சாதனை
நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, இந்தியா உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படுவதை நினைவுகூர்ந்தார். கொரோனா காலத்தில் 9 மாதங்களிலேயே இரண்டு உள்நாட்டுத் தடுப்பூசிகளை உருவாக்கி சாதனை படைத்ததை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் 99 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்காணிக்க 'U-WIN' போன்ற டிஜிட்டல் தளங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.