கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்
கனரா வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 11 வரை அவரை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் உள்ள ED அலுவலகத்தில் நேற்று நடந்த நீண்ட நேர விசாரணையைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நரேஷ் கோயல்(74) நேற்று இரவு அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ED அதிகாரிகள், நரேஷ் கோயலை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.
ரூ.538.62 கோடியை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மோசடி செய்ததாக புகார்
கடந்த மே 5ஆம் தேதி, கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில முன்னாள் நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) FIR பதிவு செய்தது. அந்த FIRரின் அடிப்படையில் தற்போது கோயலை அமலாக்க இயக்குநரகம் சிறையில் அடைத்து விசாரிக்க உள்ளது. கனரா வங்கியின் புகாரின் பேரில் அவர் மீது சிபிஐ FIRஐ பதிவு செய்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கனரா வங்கி வழங்கிய கடன் தொகையில், ரூ.538.62 கோடியை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பிற நிறுவனுகளுக்கு கமிஷனாக வழங்கி பண மோசடி செய்ததாக கனரா வங்கி புகார் அளித்திருந்தது.