Page Loader
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

எழுதியவர் Nivetha P
Feb 28, 2023
08:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், டெல்லிக்கு வரும்போது தன்னை சந்திக்குமாறு பிரதமர் மோடி கூறியதாக அவர் தெரிவித்தார். அதன்படி அவரை இன்று(பிப்.,28) உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது, நீட் விலக்கு குறித்து பேசிய நிலையில், மோடி சில விளக்கங்களை அளித்ததாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்களின் மனநிலையை அவரிடம் எடுத்து கூறினேன். மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்து வாய்ப்பினை தருமாறும் மோடியிடம் கேட்டுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர்

பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்துகொண்ட உதயநிதி

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் இவரது பயணம் அரசியல் வட்டாரத்தில் அதீத ஆவலை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் டெல்லி தமிழ் சங்கத்தலைவர் சக்தி பெருமாள், துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்டோரை சந்தித்து உரையாடியுள்ளார். இதனை தொடர்ந்து டெல்லி முத்தமிழ் பேரவை, தமிழ் கல்விக்கழக நிர்வாகிகள் ஆகியோரையும் அவர் சந்தித்துள்ளார். பின்னர், பஞ்சாப்பின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடவேண்டியவை.